மங்களூருவில் வருமானவரித் துறை அலுவலகம் சூறை இளைஞர் காங்கிரசார் போராட்டம்
கர்நாடக மந்திரி சிவக்குமாரின் வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருமானவரி சோதனையை மத்திய பா.ஜனதா அரசு அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தியதாக கூறியும், பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்தும் நேற்று பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் இளைஞர் காங்கிரசார், காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.
மங்களூரு டவுனில் அட்டவார் பகுதியில் உள்ள மண்டல வருமானவரித் துறை அலுவலகம் முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
அந்த சமயத்தில் போராட்டக்காரர்களில் சிலர் வருமான வரித் துறை அலுவலகத்தின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக ஜன்னல், கதவுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் சிலர் வருமானவரித் துறை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதனால் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பாண்டேஸ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.