தாறுமாறாய் பெய்யும் பருவ மழை இந்திய விவசாயத்தை அச்சுறுத்துகிறது
இதுவரை பருவமழை ஒரு சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றாலும் ஒரு சில இடங்களில் வெள்ளச் சேதத்தையும், மற்றொரு இடத்தில் வறட்சியையும் விட்டுச் சென்றுள்ளது.
இதனால் இவ்வாண்டு உணவு தானியங்களின் விளைச்சல் பற்றிய கணிப்புகள் தவறுதலாகிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் நம்நாடு சமையல் எண்ணெய் முதல் கால்நடை தீவனம் வரை அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வரலாம் என்று கோடிட்டு காட்டப்படுகிறது.
“எங்கு தேவையில்லையோ அங்கு பேய்மழை பெய்கிறது; இங்கு கண்டிப்பாக மழைப் பெய்ய வேண்டும், ஆனால் பதினைந்து நாட்களாக காத்திருக்கிறோம்” என்கிறார் ஒரு மராட்டிய விவசாயி. அவர் குறிப்பிடுவது போல் பாலைவன நிலமுள்ள ராஜஸ்தானில் வெள்ளம். மராட்டியம் உட்பட பல தென்னிந்திய மாநிலங்களில் மழைப் பற்றாக்குறையாக உள்ளது.
பருவ மழைகள்தான் இந்தியாவின் 70 சதவீத வருடாந்திர மழையைக் கொடுக்கின்றன. மொத்த விவசாயிகளின் பாதி நிலங்களுக்கு பாசன வசதிகள் இல்லை;அவர்கள் மழையை நம்பியேயுள்ளனர். சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாயத்தின் பங்காக இருக்கிறது. விவசாயத்தில் மொத்த மக்கள் தொகையான 1.3 பில்லியனில் பாதிப்பேருக்கு வேலை கிடைக்கிறது.
இவ்வாண்டு இந்தியாவின் 58 சதவீத நிலப்பகுதி வழக்கமான மழையைப் பெற, இதர இடங்களோ கூடுதலாகவோ, குறைவாகவோ மழையைப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையின் போக்கு தக்காளி, வெங்காயம் போன்ற அன்றாட காய்கறிகளின் விலையை மிகக்கடுமையாக ஏற்றியது. இந்நிலையில் கோடை கால விதைப்பு 3 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பில் நடப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சகம் கூறியுள்ளது. எனினும் பருவமழை அதிகரிக்கவில்லை என்றால் தென் மாநிலங்களில் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது.