நான் கட்சி அலுவலகத்துக்கு செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை டி.டி.வி.தினகரன் பேட்டி
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.க (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவை நேற்று அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், டி.டி.வி.தினகரன் சிறை அருகே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
சிறையில் சித்தியை (சசிகலா) சந்தித்தேன். அவரிடம் நலம் விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார். சாதாரண கைதிகளை போல் சிறையில் அவர் நடத்தப்படுகிறார். சசிகலா பற்றி தவறான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
கட்சியில் முடிவுகளை யார் எடுக்க வேண்டும் என்பதை அறியாமல் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகிறார். பயத்தின் காரணமாக அவர் பேசுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை. என்னை கட்சியில் இருந்து யாரும் நீக்க முடியாது.
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டும்தான் உள்ளது. இதை உணர்ந்திருந்தால் அவர் இவ்வாறு பேசி இருக்கமாட்டார்.
இரு அணிகளையும் இணைக்க காலஅவகாசம் கொடுத்தேன். ஆனால் 2 அணிகளும் இணையவில்லை. அணிகளை இணைக்க கொடுக்கப்பட்ட 60 நாள் காலஅவகாசம் முடிய உள்ளது. கட்சி 3 மாதங்களாக செயல்படவில்லை.
எனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. கட்சி பணி ஆற்றுவதற்காக தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் முறையாக அறிவிப்பேன். பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். பிரிந்தவர்களை ஒன்றாக இணைப்பதும் இதில் ஒரு அங்கம். அரசின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாவட்டங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுவேன்.
துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்துக்கு செல்வேன். நான் கட்சி அலுவலகத்துக்கு செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறதா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. எந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை. இதுபற்றி என்னால் எதுவும் கூற முடியாது.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவருடைய உரிமை. அவருடைய குற்றச்சாட்டுகள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆதாரங்கள் இருந்தால் அவர் குற்றச்சாட்டுகளை கூறலாம்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.