Breaking News
தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்பு

தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள, பன்வாரிலால் புரோஹித், இன்று(அக்.,6) காலை, 9:30 மணிக்கு, சென்னை, கவர்னர் மாளிகையில், புதிய கவர்னராக பொறுப்பேற்கிறார்.

குழப்பமான அரசியல் சூழல்:

மஹாராஷ்டிரா கவர்னர், வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர், முதல்வர், பழனிசாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். அ.தி.மு.க.,விற்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டசபையை கூட்டி, பலத்தை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

நியமனம்:

இந்நிலையில், கவர்னரிடம் கடிதம் கொடுத்த, 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சிக்கல்கள் நீடிப்பதால், தமிழகத்திற்கு முழு நேர கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அதைத் தொடர்ந்து, பொறுப்பு கவர்னர் பதவியிலிருந்து, வித்யாசாகர் ராவ் விலகினார்.

பிரிவுபசார விழா:

நேற்று காலை, தமிழக அரசு சார்பில், அவருக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. காலை, 9:30 மணிக்கு, அவர், தன் மனைவி வினோதாவுடன், தனி விமானத்தில், மும்பை சென்றார். முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள், வழியனுப்பி வைத்தனர்.

புதிய கவர்னர் வருகை:

பகல், 1:30 மணிக்கு, பயணியர் விமானத்தில், புதிய கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பெங்களூரிலிருந்து சென்னை வந்தார். புதிய கவர்னர், சென்னை வந்தபோது, மழை பெய்தது. முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., – டி.கே.ராஜேந்திரன் ஆகியோர், பூங்கொத்து கொடுத்து, புதிய கவர்னரை வரவேற்றனர். காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், புரோஹித், ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார். கிண்டி, ராஜ்பவன் முன், ஆறு குதிரை வீரர்கள் அணிவகுத்து நின்று, கவர்னரை வரவேற்றனர்.

இன்று பதவியேற்பு :

இன்று காலை, 9:30 மணிக்கு, ராஜ்பவனில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சென்னை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.