இந்திய சினிமாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு தனி அருங்காட்சியகம் முதல்–அமைச்சரிடம் திரைப்படத்துறையினர் கோரிக்கை
தமிழ் திரைப்படங்களுக்கு தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்–அமைச்சரிடம் திரைப்படத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
14–வது திரைப்பட விழா
சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சரை திரைப்படத்துறையினர் சந்தித்து பேசினர். பின்னர் அங்கு நிருபர்களுக்கு இயக்குனரும், நடிகருமான மனோபாலா, நடிகை சுஹாசினி அளித்த பேட்டி வருமாறு:–
14–வது சர்வதேச சென்னை திரைப்பட விழா 5–ந் தேதி (இன்று) தொடங்குகிறது. அதற்கு அரசின் உத்தரவைப் பெற வந்தோம். அரசு நடத்தும் விழா இது. ஒவ்வொரு ஆண்டும் முதல்–அமைச்சரை சந்தித்து ஆசி பெறுவதோடு, அரசு உத்தரவையும் பெற்றுச்செல்வோம்.
சினிமாவின் தலைநகரம்
இந்த முறை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளோம். இந்த திரைப்பட விழா எளிமையாக நடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து இன்னும் சிறப்பாக நடத்தவேண்டும் என்பதற்காக சில கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.
இந்த விழாவுக்கு எப்போதுமே அரசின் நிதி ஓரளவுக்கு கிடைக்கும். இந்திய சினிமா தற்போது 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இதில் தமிழ் சினிமா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மும்பையைவிட சென்னைதான் சினிமாவுக்கு தலைநகரம் எனக்கூறலாம்.
தனி அருங்காட்சியகம்
எனவே, தமிழ் சினிமாவுக்கு ஒரு சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் திரைப்படத்துறையில் நடித்துள்ள ஜாம்பவான்களின் நினைவாக வளைவு அமைக்கப்படவேண்டும். இதையும் அவரிடம் கூறியிருக்கிறோம்.
முக்கியமாக தமிழ் சினிமாவுக்கென்று தனியாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளோம். இதையெல்லாம் கோரிக்கையாக கொடுத்தால் பரிசீலிப்பதாக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினத்தந்தி