ராகுலுக்கு இந்திய வரலாறோ, புவியியலோ தெரியாது : மத்திய அமைச்சர் தாக்கு
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், சமீப காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசி உள்ள கருத்து கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யின் பாலியா பகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரிடையே பேசிய கிரிராஜ் சிங், நடிகர்களைப் போல் எழுதி கொடுத்ததை மட்டுமே ராகுல் வாசிக்கிறார். அவருக்கு இந்திய வரலாறு, புவியியல் பற்றிய எந்த அறிவும் கிடையாது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 9 கோடி பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது தெரியாமல் ராகுல் பேசுகிறார்.
அயோத்தியில் 200 சதவீதம் ராம் கோயில் கட்டுவோம். அதனை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்தே கட்டுவார்கள். மதங்கள் வேறுபட்டு இருந்தாலும் அவர்களின் மூதாதையர்கள் ஒருவரே. 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்.,ன் கொள்கை நன்றாக இருந்திருந்தால் எதனால் அவர்களின் செல்வாக்கு 20 சதவீதம் குறைய வேண்டும். பா.ஜ.,வின் செல்வாக்கு 75 சதவீதம் உயர வேண்டும் என பேசி உள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு உ.பி., காங்கிரஸ் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பா.ஜ., ஆட்சியில் உ.பி.,யில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அந்த கட்சி தலைவர்கள் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் காங்., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.