சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி; தகவல் தெரிவித்தோர் மீது தாக்குதல்
பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டது குறித்து, தகவல் தெரிவித்தவர்களை, சிறை அதிகாரிகள் தாக்கியுள்ளது, மனித உரிமை ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டது. இதற்காக, கர்நாடக சிறைத் துறை, டி.ஜி.பி.,க்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது’ என, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா பகிரங்கமாக புகார் கூறினார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது குறித்த தகவல்கள் தெரிவித்த கைதிகள், ஜூலை 16ல், வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அப்போது, அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து, கர்நாடக மாநில மனித உரிமை ஆணை யம், தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மனித உரிமை ஆணையத்தின், ஐ.ஜி., சோமேந்து முகர்ஜி, சிறையில் நேரடியாக விசாரணை நடத்தி, 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர், மீரா சக்சேனா கூறியதாவது: பரப்பன அக்ரஹாரா சிறை மற்றும் மற்ற சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணைகள், கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் உள்ளிட்டவற்றில், சிறையில் சில கைதிகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலர் மிகவும் பலமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை, மாநில அரசுக்கு அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.