பதற்றம் தணிக்க அமெரிக்கா–பாகிஸ்தான் நடவடிக்கை; இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மந்திரிகளை அனுப்புகின்றன
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு சீர்கேடு அடைந்து வருகிறது. அமெரிக்கா, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரை நடத்தி வருகிறது. ஆனால் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணை போகிறது.
இதில் பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு 2011–ம் ஆண்டில் இருந்து பதற்றமான நிலையில் உள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் 21–ந் தேதி, ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசியபோது மேலும் மோசம் அடைந்தது.
அப்போது டிரம்ப், பாகிஸ்தானுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார். டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றம் கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ், அந்த நாட்டு பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசினார்.
அவர், ‘‘பாகிஸ்தானுக்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 2 உயர்மட்ட தூதுக்குழுக்கள் செல்கின்றன. ஆப்கானிஸ்தான் போரில் நாம் வெற்றி பெறுவதற்காக அமெரிக்காவின் முயற்சிகளில் பாகிஸ்தானின் பங்களிப்பை பெறுவதற்காக இந்த பேச்சு நடத்தப்படுகிறது. இந்த உயர்மட்ட தூதுக்குழுவினரின் பயணத்தை தொடர்ந்து நானும் பாகிஸ்தான் செல்கிறேன். என்னை தொடர்ந்து வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் செல்வார்’’ என்று கூறினார்.
மேலும் அவர், ‘‘இது வெற்றி பெறும். இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெறாத பட்சத்தில், மகத்தான சக்திவாய்ந்த வேறு வாய்ப்புகள் உள்ளன’’ என்று எச்சரித்தார்.
இருப்பினும் இரு தரப்பிலும் உள்ள பதற்றத்தை தணிக்கிற சூழல் உருவாகி உள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப், அமெரிக்கா சென்று வந்துள்ளார். அவருடைய அமெரிக்க பயணம், பரவலாக ஆதரவையும், எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. அவரை தொடர்ந்து பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசன் அக்பால் வரும் புதன்கிழமை அமெரிக்கா செல்கிறார்.
இதேபோன்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனும், அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ்சும் பாகிஸ்தான் செல்கிறார்கள்.
இவர்கள் நடத்துகிற பேச்சு வார்த்தைகள் இணக்கமான முறையில் அமையுமானால் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் ஒரு மாற்றம் வரலாம், பதற்றம் தணியலாம். இல்லாத பட்சத்தில் பாகிஸ்தான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கவும், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தவும், பாகிஸ்தானை நேட்டோ நாடுகள் அல்லாத கூட்டாளிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தனிமைப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.