லிபியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் சாவு
லிபியாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிரெனைகா பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய கடற்கரை நகரம் டெர்னா. இந்த நகரம் மதவாத பயங்கரவாதிகள் மற்றும் டெர்னா முஜாகீதின் ஷூரா கவுன்சில் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவர்களிடம் இருந்து இந்த நகரை மீட்க லிபிய தேசிய ராணுவப்படை நீண்டகாலமாக போராடி வருகிறது. அதன் ஒரு அங்கமாக அந்த நகரில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து ராணுவம் வான்தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம், டெர்னா நகரில் உள்ள தார் அல்–ஹமார் மாவட்டம் மற்றும் அல் பட்டாயா ஆகிய இடங்களில் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இந்த வான்தாக்குதல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 15 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். வான்தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க ராணுவம் மறுத்து விட்டது.