பருவமழை பொய்த்ததால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது சிக்கனமாக பயன்படுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்
பருவமழை பொய்த்ததால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. எனவே பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
சென்னை மாநகரின் ஒரு வருடத்துக்கான சராசரி மழையின் அளவு 1,200 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழைப்பொழிவு 2 காலக் கட்டங்களாக, அதாவது தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) 400 மில்லி மீட்டர் என்ற அளவிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 800 மில்லி மீட்டர் என்ற அளவிலும் பெய்கிறது. இதன்மூலமாக சென்னை மாநகர நீர்த்தாங்கிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
சென்னை நகரின் நிலத்தடி நீர் மட்டத்தையும், அதன் உப்புத்தன்மையையும் சென்னை குடிநீர் வாரியம் மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறது. சென்னை மாநகரில் 3 விதமான மண் வகைகள் உள்ளன. அதாவது மணல் சார்ந்த பகுதி, களிமண் சார்ந்த பகுதி மற்றும் பாறை சார்ந்த பகுதிகளாகும். இந்த 3 மண் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் நீர் ஊடுருவும் தன்மை வேறுபடும்.
மழைப்பொழிவு பற்றாக்குறை
நிலத்தடி நீர் மட்டம் ஆண்டு தோறும் பருவநிலைக்கு ஏற்றபடி மாறக்கூடியது. எனவே நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அதன் தரத்தை குறிப்பிட்ட மாதத்தின் அளவை, கடந்த வருடத்தின் அதே மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒரு வருடத்தில் உள்ள வெவ்வேறு மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. ஏனென்றால் குறிப்பிட்ட வருடத்தின் ஜூலை மாத நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அதன் தரம் அந்த வருடத்தின் ஜனவரி மாதத்தைவிட எப்பொழுதும் குறைவாகவே இருக்கும்.
அந்த வகையில் 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதங்களில் உள்ள நீர்மட்ட அளவுகளை ஒப்பிடும்பொழுது சென்னையில் உள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 0.97 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை குறைந்து உள்ளது. பருவமழை பொய்த்ததால், 2016–ம் ஆண்டில் தமிழகத்தில் சென்னை நீங்கலாக மொத்த மழைப்பொழிவு 61 சதவீத பற்றாக்குறையோடும், சென்னை மாநகரில் மழைப்பொழிவு 23 சதவீத பற்றாக்குறையோடும் பெய்துள்ளது.
குடிநீர் சிக்கனம்
இத்தகைய குறைந்த மழைப்பொழிவின் காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிமுறைகளை, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.
அதன் விவரம் வருமாறு:–
* குடிநீர் வாரியத்தால் சுத்திகரித்து வழங்கப்படும் குடிநீரை குடிக்க, சமைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும்.
* குழாய் அமைப்பில் ஏற்படும் நீர் கசிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
* பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை மூடிவைக்கவும்.
* முகச்சவரம் செய்யும்போதும், பல்துலக்கும் போதும் தண்ணீர் குழாயை மூடி வைக்கவும்.
* சமையலறை மற்றும் குளியலறையில் இருந்து வெளியேறும் நீரை தோட்ட செடிகளுக்கு பாய்ச்சி பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தகவல்கள் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது
நன்றி : தினத்தந்தி