குடல் சுத்தமானால் உடல் சுத்தமாகும்!
‘‘உண்ணும் உணவு செரிமானம் ஆகக்கூடிய ஒரு முக்கியமான பகுதிதான் குடல். அத்தோடு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொண்டு உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதும் குடல்தான். அதனால் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக்க அவசியம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா.
குடலை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதற்கான சில எளிய வழிமுறைகளையும் கூறுகிறார்.
குடலின் நான்கு பகுதிகள்
குடலை நான்கு பகுதிகளாக பிரித்து வைத்திருக்கின்றனர். வாய், உணவு செல்லும் பாதை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவையாகும். உணவை நாம் வாயில் சாப்பிட ஆரம்பிக்கிறோம். அது கடந்து உணவுப் பாதை வழியாக இரைப்பைக்குச் செல்கிறது. அப்போது உணவை உடைக்கக்கூடிய சில அமிலங்களின் மூலம் இரைப்பையில் உணவு சென்று உடைகிறது. அதன் பிறகு உணவு கூழ் ஆக்கப்பட்டு சிறுகுடலுக்குச் செல்கிறது.
சிறுகுடலில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறியப்பட்டு, பெருங்குடலுக்குச் சென்று மேலும் சில சத்துக்கள் உறியப்பட்ட பிறகே மலமாக தங்கியிருந்து ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதுவே குடலின் முக்கியமான பிரதான பணியாகும். அதனால் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்.
மனோநிலையிலும் கவனம் அவசியம்
நம் உடலுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும்போது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஆரோக்கியமான உணவை உண்ணும்போது நம்முடைய மனமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சாப்பிட அமரும்போது தொலைத்தொடர்பு சாதனங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு அமைதியாகவும், மகிழ்ச்சியான மனநிலையிலும் உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம்.
ரசித்து சாப்பிடுங்கள்
உங்கள் தட்டில் இருக்கும் உணவை அதை கையில் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாயில் இருக்கும் உணவை மென்று எச்சில் ஊற ரசித்துச் சாப்பிட வேண்டும். அத்தோடு உணவை அவசரகதியில் எடுத்துக் கொள்ளாமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்பதும் அவசியம். அதேபோல, உணவை நன்றாகப் பசித்தபிறகே எடுத்துக் கொள்ள வேண்டும். இது நாம் நம் குடலுக்கு பெரிதும் உதவுவதாகும்.
ஆயுர்வேதம் காட்டும் வழிஉணவை எடுத்துக் கொள்ளும்போது ஆயுர்வேத மருத்துவத்தின்படி இரைப்பையை நான்கு விதமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இரைப்பையின் பாதி பகுதி திட உணவாலும், கால் பகுதி திரவ உணவாலும், கால் பகுதியை காலியாகவும் விட்டுவிட வேண்டும். இதன் மூலம் உங்களுடைய குடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக உறியப்பட்டு சரியாக வெளியேற்றப்படும்.
மலம் கழிக்கும் முறை
முடிந்தவரை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மலம் கழிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஒரு முறையாவது, அதுவும் அதிகாலையில் மலம் கழிப்பது நல்லது. அதேபோல உடலில் தேங்கியுள்ள மலம் வெளியேற்றுவதற்கான சரியான நேரமாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி சரியான நேரமாகும். அப்போதுதான் உடலில் அபான வாயு திறன்மிக்கதாக இருக்கிறது. திறன்மிக்கதான இந்த வாயு மலத்தினை வெளியேற்றுவதற்காக உதவுகிறது. அதிகாலையில் எழுவது அவசியம் என்று கூறுவதற்கு இதுவும் முக்கியக் காரணம்.
விரதம் இருக்கலாமா?!
குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரதம் எடுப்பது நல்லது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு நாள் முழுக்க எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் பசிக்கும்போது எடுத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் திரவ உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய குடல் பகுதி புத்துணர்வு பெற்று வலிமை மிக்கதாக மாறுகிறது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை…
மருத்துவரின் ஆலோசனைப்படியும், அவரின் வழிகாட்டுதல்படியும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள எல்லா கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியமாக இருப்பதோடு புத்துணர்வும் பெறுகிறது. முக்கியமாக, பேதி மாத்திரை எடுத்துக் கொள்ளும் ஒரு நாள் மட்டும் அரிசி கஞ்சி, தயிர்சாதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் உடலை நோய் நொடி இல்லாமல் வைத்துக் கொள்ள முடியும்.
நோயாளிகளின் கவனத்துக்கு
மேலே குறிப்பிட்ட எல்லா வழி முறைகளும் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதனால் ஏற்கெனவே வயிறு பிரச்னை உடையவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் முறையான ஆலோசனையின்படியே இந்த வழி முறைகளை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்றாடம் செய்ய வேண்டியது
சாப்பிட்டவுடனே தூங்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நேரத்துக்குத் தூங்கி அதிகாலையில் எழுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப் பகுதியை நன்றாகத் துலக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் 10 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பது வாயை நன்கு சுத்தப்படுத்தும்.
காலையி–்ல் எழுந்தவுடன் வெது வெதுப்பான சுடுதண்ணீர் குடிப்பதும் நல்லது. இது மலம் கழிப்பதை சுலபமாக்க உதவும். அடிக்கடி தேநீர், காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது எல்லா விதங்களிலும் நல்லது. அதேபோல் சாப்பிடும்போது அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடாது. முதல் வேளை உணவுக்கும் இரண்டாம் வேளை உணவுக்கும் இடையில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.
சக்தியை இழக்காதீர்கள்!
பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதுபோல நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த வகை உணவும் சரியான தட்பவெப்ப நிலையில் இருக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நிலையிலோ அதிக வெப்ப நிலையிலோ இருக்கக் கூடாது. இதனால் குடல் செரிமான சக்தியை இழக்க நேரிடும்.