நல்லுறவை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீனா
இரு தரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சிக்கு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த சீனா தயாராக உள்ளதாக அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டு வருகிறது.
பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் ஆசாரை ஐநாவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையிலும், சீனாவின் முட்டுக்கட்டையால் இந்த முயற்சி தடைபட்டு வருகிறது. தடை விதிக்கும் குழுவில் உள்ள நாடுகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறி சீனா தொடர்ந்து மசூத் ஆசாரை பயங்கரவாத அறிவிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க மறுத்து வருகிறது.
சீனாவின் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறுகிய நோக்கங்களுக்காக பயங்கரவாதத்துக்கு இடமளிப்பது குறுகிய பார்வை கொண்டது எனவும் எதிர்மறையான செயல் என்றும் இந்தியா தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவுதுறை துணை மந்திரி ஷென் ஷியோடாங், “ இந்தியாவுடனான உறவுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “ சீனாவின் முக்கியமான அண்டைநாடு இந்தியாவாகும். நல்லுறவை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.