Breaking News
தகவல் தொழில் நுட்பத்துறையினரின் வரவேற்பை பெற்ற அமெரிக்காவின் ‘எச்-1பி விசா’ நடைமுறையில் மாற்றங்களா? பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலால் பரபரப்பு

தகவல் தொழில் நுட்பத்துறையினரின் வரவேற்பை பெற்ற அமெரிக்காவின் ‘எச்-1 பி’ விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘எச்-1 பி’ விசா

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விசா கேட்டு விண்ணப்பங்கள் குவிவதும், குலுக்கல் நடத்தி விசா வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டு

இப்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘எச்-1 பி’ விசாக்களால் அமெரிக்காவில், உள்நாட்டினரின் வேலை வாய்ப்பு பாதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே இந்த ‘எச்-1 பி’ விசாக்களில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, பிற நாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலானது. கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.

மசோதா தாக்கல்

இப்போது புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப், வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வருகிறார்.

இந்த நிலையில் ‘எச்-1 பி’ விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்வதற்காக ‘அமெரிக்க வேலைவாய்ப்பு பாதுகாப்பு, வளர்ச்சி மசோதா’வை, அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த குடியரசு கட்சி எம்.பி.க்கள் டேரல் இஸாவும், ஸ்காட் பீட்டர்சும் தாக்கல் செய்தனர்.

மாற்றங்கள்

இதில் ‘எச்-1 பி’ விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தகுந்த 2 அம்சங்கள் வருமாறு:-

* ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.68 லட்சம்) சம்பளம் பெறுகிற வேலைகளில் அமர்வோருக்குத்தான் ‘எச்-1 பி’ விசா வழங்க வேண்டும்.

* முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கான விதிவிலக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த ‘எச்-1 பி’ விசாவை டிஸ்னி, சோக்கால் எடிசன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் மாற்றங்கள் கொண்டுவர வகை செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எம்.பி.க்கள் கருத்து

மசோதாவை தாக்கல் செய்துள்ள எம்.பி., டேரல் இஸா கூறும்போது, “அமெரிக்கா மீண்டும் தலைமைபீடத்துக்கு வருவதற்கு நாம் உலகின் தலைசிறந்த, ஆற்றல் வாய்ந்த பணியாளர்களை நம்மிடம் வைத்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து மலிவான சம்பளத்தில் பணியாளர்களை அமர்த்தி, இந்த விசாக்களை கம்பெனிகள் தவறாக பயன்படுத்துவதை தடை செய்தாக வேண்டும். நாங்கள் தாக்கல் செய்துள்ள மசோதா இதற்கெல்லாம் வகை செய்யும்” என்றார்.

ஸ்காட் பீட்டர்ஸ் கூறுகையில், “எச்-1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்து விட்டால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இந்த மசோதா, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.