உத்தரபிரதேசத்தில், அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்து பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட உஞ்சாஹர் பகுதியில் தேசிய அனல்மின் கழகத்துக்கு சொந்தமான பெரோஸ் காந்தி அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு 500 மெகாவாட் திறன் கொண்ட 6–வது அலகு புதிதாக அமைக்கப்பட்டு அதன் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.
வணிக ரீதியாக பணியை தொடங்கும் முன்னரே இந்த அலகில் இருந்த பிரமாண்ட கொதிகலன் (பாய்லர்) நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அதிக அழுத்தம் காரணமாக இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தால் தீயில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அலகாபாத், லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் மாலையில் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய ஆர்.கே.சிங், தேசிய அனல்மின் கழக தொழில்நுட்ப இயக்குனர் தலைமையிலான இந்த விசாரணைக்குழுவினர் 20 நாட்களுக்குள் தங்கள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.