ஆதார் சட்டம், அரசியல் சாசனத்தின்படி செல்லுபடி ஆகுமா?
நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்க வகைசெய்து மத்திய அரசு ஆதார் சட்டம் இயற்றியது.
இதன்படி மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெற இந்த ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் அரசியல் சாசன அமர்வின் முன் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளன.
இந்த நிலையில், ஆதார் சட்டம் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடி ஆகத்தக்கது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மேத்யூ தாமஸ் என்பவர் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த வழக்கில் அவர் ஆதார், தனிநபர்களின் அந்தரங்க உரிமையை பறிப்பதாகவும், பயோமெட்ரிக் வழிமுறை சரியாக வேலை செய்வதில்லை எனவும் கூறி உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வின் முன், மேத்யூ தாமஸ்சின் வக்கீல் நேற்று முறையிட்டார். அப்போது அவர், ‘‘இதேபோன்ற மனுக்கள் நாளை (இன்று) விசாரணை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க ஏற்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
அதை நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் ஏற்றுக்கொண்டார். எனவே இந்த வழக்கு அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.