ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் சம்பூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மேலும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஒரு சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.