அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று நவம்பர் 3-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், ”கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடகளில் கன மழை பதிவாகியுள்ளது.
உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. ஒரு இல இடங்களில் கன மழை பெய்துள்ளது. சென்னை, மயிலாப்பூர், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் 30 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மழை அளவு..
டிஜிபி அலுவலகம் 30 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம் 20 செ.மீ., தரமணி 19, நுங்கம்பாக்கம்- 18, மீனம்பாக்கம் 14,அண்ணா பல்கலைக்கழகம் 13, தாம்பரம் 12, மகாபலிபுரம் 11, சோழவரம் 9, ஓலப்பாக்கம், சிதம்பரம், மாதவரம், காரைக்கால், பொன்னேரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவானது.
காற்றழுத்த தாழ்வு நிலை…
தென் மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய வானிலையின்படி, 2 நாட்களுக்கு இதே நிலை தொடரும்.
மழை வாய்ப்பு…
அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களின் அனேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் தமிழகம் ஒட்டிய கடலுக்குப் போகும்போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.