மனைவியை கொன்று உடலை கூறுபோட்ட கணவர் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் தானே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
வெளிநாடு செல்ல திட்டமிட்ட மனைவியை கொன்று உடலை கூறுபோட்ட கணவர் ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
மனைவி கொலை
தானே பயந்தரை சேர்ந்தவர் கிரிஷ் போட்டே(வயது38). இவரது மனைவி மதுவதனி. இவருக்கு தானேயில் வசிக்க பிடிக்கவில்லை. இதனால் தனது தாய் பிறந்த பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டார். இதற்கு கிரிஷ் போட்டோ மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனைவி மீது கிரிஷ் போட்டேவுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டானது. கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி அவர் மனைவி மதுவதனியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
பின்னர் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டு வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து பூட்டினார்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை தொடர்பாக போலீசார் கிரிஷ் போட்டேவை கைது செய்து, தானே மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அவர் மீதான கொலை குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது கிரிஷ் போட்டேவை நீதிபதி குற்றவாளி என அறிவித்தார்.
இந்தநிலையில் அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மனைவியை கொலை செய்து, உடலை கூறுபோட்ட குற்றவாளி கிரிஷ் போட்டேவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். குற்றவாளியை குறிப்பிட்ட காலத்துடன் விடுதலை செய்து விடாமல், ஆயுள் நாள் முழுவதும் அவர் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி