சென்னையில் பெருவெள்ளம் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் யோசனை
சென்னையில் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் யோசனை தெரிவித்து உள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ‘தமிழ்நாடு வெள்ளங்கள் கற்ற பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள்’ என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பற்றிய ஆய்வு அறிக்கையாக இதனை வெளியிட்டு இருக்கிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும், ஆய்வாளர்களும் சிறப்புக்குழுவாக தமிழ்நாட்டின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து பேசி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
2015–ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெற்ற அனுபவத்தை கொண்டு தமிழக அரசு 2016–ம் ஆண்டில் ‘வார்தா’ புயல் வந்தபோது நிலைமையை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மேலும் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகளும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.