ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளையாக சிபிஐ மாறிவிட்டது: காங். மூத்த தலைவர் கமல்நாத் குற்றச்சாட்டு
வியாபம் வழக்கில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு , சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியதை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாக சிபிஐ மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்நாத் கூறுகையில், “ சிவராஜ்சிங் சவுகானுக்கு எந்த நீதிமன்றமாவது நற்சான்றிதழ் வழங்கியதா? சிபிஐ அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் சிபிஐ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாக தன்னை சுருக்கி கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ-ஐ கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சிபிஐ தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் சிபிஐ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளையாக மாறிவிட்டது நிரூபணம் ஆகியுள்ளது” என்று தெரிவித்தார்.
சிவராஜ் சிங் மீதான குற்றச்சாட்டின் விபரம்:-
மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்வாணையமான ‘வியாபம்’ 2013–ம் ஆண்டு பல்வேறு அரசு பணிகளில் சேருவதற்கு நடத்திய தேர்வுகளில் பெரும் அளவில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பலர் அவ்வப்போது மரணம் அடைந்ததால் இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. இதைத் தொடர்ந்து இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த முறைகேட்டில் மாநில முதல்–மந்திரி சிவராஜ் சிங் பெயர் மறைமுகமாக இடம் பெற்று இருப்பதாகவும், முக்கிய குற்றவாளியிடம் கைப்பற்றிய கம்ப்யூட்டர் ‘ஹார்டு டிஸ்க்’கில் பதிவாகி இருந்த முதல்–மந்திரியின் பெயர் அழிக்கப்பட்டு விட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதுகுறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ செவ்வாய்க்கிழமை(அக்.31) தாக்கல் செய்தது. அதில் வியாபம் அதிகாரிகள் 3 பேர் உள்ளிட்ட 490 பேரின் பெயர்கள், குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் உள்ளது. மத்தியப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌஹானின் பெயர் அதில் இல்லை. இதனால், அவருக்கு அந்த ஊழலில் தொடர்பில்லை என்று சிபிஐ அமைப்பு முடிவெடுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.