முழு கொள்ளளவை எட்டுகிறது மதுராந்தகம் ஏரி : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, ஓரிரு நாட்களில் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மதுராந்தகம் ஏரிக்கு சுமார் 400 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 23.3 அடி உயரம் கொள்ளளவு உள்ள ஏரியில் தற்போது 21.5 அடி தண்ணீர் உள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் ஏரி நிரம்பிவிட்டால், ஏரிக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படும்.
எனவே கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படும் என்பதால் கரையோரம் உள்ள முள்ளி, வளர்பிறை, மலைப்பாளையம் உட்பட 21 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறும் படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.