மழை மீட்பு, நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் வேஷ்டியை மடித்துக்கட்டி களத்தில் குதித்தனர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரம் காட்டி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் மழை மீட்பு நிவாரண பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தார்.
சென்னை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் மழை நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்துவதற்காக மண்டல வாரியாக அமைச்சர்களை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.
அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன், மணலி மண்டலத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், மாதவரம் மண்டலத்தில் அமைச்சர்கள் காமராஜ், பா.பென்ஜமின் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, ராயபுரம் மண்டலத்தில் எம்.சி.சம்பத், திரு.வி.க. நகர் மண்டலத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர் ராஜூ, அம்பத்தூர் மண்டலத்தில் அமைச்சர் கே.பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் மழை மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், தேனாம்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கோடம்பாக்கம் மண்டலத்தில் டாக்டர் சரோஜா, வளசரவாக்கம் மண்டலத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, அடையாறு மண்டலத்தில் அமைச்சர்கள் டாக்டர் எம்.விஜயபாஸ்கர், நிலோபர் கபீல், பெருங்குடி மண்டலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, உடுமலைப்பேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராயபுரம் மற்றும் திரு.வி.க.மண்டலத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் பி.தங்கமணி, வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சோழிங்கநல்லூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கூடுதல் பொறுப்புகளோடு மழை நிவாரண பணிகளை தூரிதப்படுத்தி வருகின்றனர்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மழைப் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளோடு, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், களப்பணியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.
தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பராவாமல் தடுப்பதற்கான ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எம்.விஜயபாஸ்கர் முனைப்புக்காட்டி உள்ளார்.
அமைச்சர்கள் குளம்போல் தேங்கிய மழைநீரில் வேஷ்டியை மடித்துக்கட்டி இறங்கி சென்று மக்களை சந்திக்கின்றனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.
அமைச்சர்கள் போன்று அதிகாரிகளும் ஓய்வு இல்லாமல் மழை மீட்பு நடவடிக்கைகளில் களம் இறங்கி உள்ளனர். வருவாய்த்துறை முதன்மை செயலாளர் கொ.சத்யகோபால், செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திக்கேயன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் பம்பரம் போல் சுழன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்துவதற்காக மாவட்டவாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.