ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: 2-வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’
ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கியில், திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி 2-வது முறையாக பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அத்துடன் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.
8 அணிகள் இடையிலான 9-வது ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வந்தது. இதில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டு முறை சாம்பியனான சீனாவும் பலப்பரீட்சையில் இறங்கின. ஆரம்பத்தில் சீனாவுக்கு இரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் முயற்சியை இந்திய கோல் கீப்பர் சவிதா முறியடித்தார். விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தில் 25-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் கோல் போட்டார்.
இதன் பிறகு பதில் கோல் திருப்ப தாக்குதல் பாணியை தீவிரப்படுத்தய சீனாவுக்கு 47-வது நிமிடத்தில் பலன் கிட்டியது. அந்த அணியின் டியான் டியான் லு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை கோலாக்கினார். அதன் பிறகு மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றது. இதன்படி இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் முதல் 4 வாய்ப்புகளை இரு அணியினரும் கோலாக்கினர். 5-வது வாய்ப்பை சீனா தரப்பில் கேப்டன் குயுஸியாவும், இந்திய தரப்பில் நவ்னீத் கவுரும் வீணாக்கினர். பெனால்டி ஷூட்-அவுட்டிலும் சமநிலை நீடித்ததால், ‘சடன்டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் வாய்ப்பில் சீன வீராங்கனை லியாவ் மியூ அடித்த ஷாட்டை, இந்திய கோல் கீப்பர் சவிதா தடுத்து பிரமாதப்படுத்தினார். அதே சமயம் இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பை கேப்டன் ராணி கோலாக்கி, பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி மகுடம் சூடியது. நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பட்டம் வென்றதன் மூலம் இந்திய அணி 2018-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. ஆசிய கோப்பையை இந்திய அணி சொந்தமாக்குவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2004-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் வாகை சூடியிருந்தது. இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கிய சவிதா, தொடரின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தென்கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. வெற்றிக்குரிய கோலை முதல் நிமிடத்தில் ஷின் ஹி ஜியோங் அடித்தார்.
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையை வென்று சாதித்த இந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஆண்கள் ஆசிய கோப்பையிலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒரே ஆண்டில் ஆசிய கோப்பையை கையில் ஏந்துவது இதுவே முதல் நிகழ்வாகும்.