உலக டென்னிஸ் தரவரிசை: இந்திய வீரர் திவிஜ் சரண் 50–வது இடத்துக்கு முன்னேற்றம்
உலக டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (10,645 புள்ளிகள்), சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (9,005 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களில் தொடருகின்றனர். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே ஒரு இடம் முன்னேறி 3–வது இடத்தையும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் முன்னேறி 4–வது இடத்தை பெற்றுள்ளனர். குரோஷியா வீரர் மரின் சிலிச் 5–வது இடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் திவிஜ் சரண் இரட்டையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 50–வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் ‘டாப்–50’–க்குள் திவிஜ் சரண் இடம் பிடித்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்திய வீரர்களில் ரோகன் போபண்ணா 15–வது இடத்துடன் முன்னிலையில் இருக்கிறார். புராவ் ராஜா 62–வது இடமும், லியாண்டர் பெயஸ் 70–வது இடமும், ஜூவன் நெடுஞ்செழியன் 97–வது இடமும் விஷ்ணுவர்தன் 16 இடங்கள் ஏற்றம் கண்டு 118–வது இடத்தையும், ஸ்ரீராம் பாலாஜி 139–வது இடத்தையும் பிடித்தனர்.
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 140–வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 148–வது இடத்திலும், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் 255–வது இடத்திலும், சுமித் நாகல் 350–வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (6,175 புள்ளிகள்), ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,135 புள்ளிகள்) முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,015 புள்ளிகள்) 3 இடங்கள் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளார். செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (5,730 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 4–வது இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (5,597 புள்ளிகள்) 5–வது இடத்தில் நீடிக்கிறார்.
இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 3 இடங்கள் சறுக்கி 12–வது இடம் பெற்றுள்ளார். 2013–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு சானியா மிர்சா ‘டாப்–10’ இடத்துக்கு வெளியே இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
டெல்லியை சேர்ந்த 31 வயதான திவிஜ் சரண் அளித்த பேட்டியில், ‘2003–ம் ஆண்டில் நான் முதல் ஏ.டி.பி.புள்ளியை பெற்றேன். நீண்ட நெடிய பயணத்துக்கு பிறகு இந்த நிலையை எட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது ஆட்டத்தில் ஏற்றம், இறக்கம் இருந்து இருக்கிறது. இன்னும் உயர்ந்த நிலையை எட்டி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். ‘டாப்–30’ இடத்துக்குள் வர வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்காகும்’ என்று தெரிவித்தார்.