‘மும்பை பயங்கரவாத தாக்குதல் பாக்., மதிப்பை சீரழித்து விட்டது’
‘மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல், சர்வதேச அளவில், பாக்.,கின் மதிப்பை சீரழித்துவிட்டது’ என, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு செயலர், ரியாஸ் முகமது கான் கூறியுள்ளார்.
இந்தியா பழி:
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள, பாக்., துாதரகத்தில், காஷ்மீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ரியாஸ் முகமது கான் பேசியதாவது: மும்பையில், 2008ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்டது, பாக்.,தான். ஏனெனில், இந்த தாக்குதலை வைத்து, பாக்., மீது, இந்தியா பழி சுமத்தியது. இதனால், சர்வதேச அளவில், பாக்,., மீதான மதிப்பு, சீரழித்து விட்டது.
இந்தியாவுக்கு உதவி:
காஷ்மீர் போராட்டத்துக்கு, அரசியல் ரீதியாக ஆதரவு தர வேண்டியது அவசியம். காஷ்மீர் பிரச்னையில், இந்தியா கூறுவதை, அமெரிக்கா நம்புகிறது. அதனால்தான், பாக்., மீது ஒரு கண் வைத்திருக்கும்படி, இந்தியாவை, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே கேட்டு கொண்டுள்ளார். காஷ்மீர் பேராட்டத்தை அழிக்கும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில், ஹாலேவின் பேச்சு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.