வாரத்துக்கு ரூ 24 ஆயிரம்தான்… தங்கள் பணத்தை எடுக்க மக்களுக்கு கட்டுப்பாடு தொடர்கிறது!
வங்கியிலிருந்து மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு தொடர்கிறது.
இனி வரும் நாட்களிலும் ஒரு வாரத்துக்கு ரூ 24 ஆயிரம் மட்டுமே காசோலை மூலம் எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும், வங்கிகளில் நேரடியாகச் சென்று பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நடுத்தர, சாமானிய மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த, சேமித்த பணத்தை எடுக்க பெரும் வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை.
இந்த கட்டுப்பாடுகளில் முக்கியமானது வங்கிகளுக்கு நேரடியாக சென்று தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்பது.
நவம்பர் 24-க்குப் பிறகு இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் தளர்த்தப்படவில்லை.
இது தொடர்பாக ஆர்பிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை வங்கிகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தொடரும். ஏடிஎம்மில் எடுக்கும் தொகையும் இதில் அடங்கும்.
ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கும் இதே கட்டுப்பாடு நீடிக்கும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏடிஎம்-களில் ஒருநாளைக்கு ரூ.2,000 எடுக்கலாம் என்ற உச்சவரம்பு, ரூ.2,500-ஆக கடந்த 13-ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம்-கள் மூடப்பட்டிருந்தன. சில ஏடிஎம்களில் ரூ 2000 நோட்டு மட்டுமே வந்தது. 100 ரூ நோட்டே இல்லாததால் 2500 ஐ யாராலும் எடுக்க முடியவில்லை.