தமிழக மீனவர்கள் 51 பேர் விடுதலை இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள்.
51 மீனவர்கள் கைது
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடி, கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 51 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர் களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 39 பேர் யாழ்ப்பாணம் சிறையிலும், 12 பேர் வவுனியா சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர் களுடைய படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தினார்.
மந்திரிகள் பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய விவசாய மந்திரி ராதா மோகன் சிங் தலைமையிலான இந்திய குழுவினருக்கும், இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரவீரா தலைமையிலான குழுவினருக்கும் இடையே கொழும்பு நகரில் கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது தமிழக மீனவர்கள் 51 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு சம்மதம் தெரிவித்தது. அத்துடன் தங்கள் வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் 114 படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிப்பதாகவும் தெரிவித்தது.
விடுதலை
இந்தநிலையில், நல்லெண்ண அடிப்படையில் 51 மீனவர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து இலங்கை அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு மன்னார், ஊர்க்காவல்துறை கோர்ட்டுகளில் வழங் கப்பட்டது.
இதையடுத்து சிறைகளில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 27 பேர், பாம்பன் மீனவர்கள் 5 பேர், தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் என 51 மீனவர்களும் கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் அதிகாரி நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழகம் திரும்புவது எப்போது?
அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 51 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.
இதேபோல் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 3 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இதற்கிடையே, 2 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக் கப்பட்டு உள்ளனர். அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மீனவ சங்க தலைவர்கள் அருளானந்தம், தேவதாஸ் ஆகியோர் கூறியதாவது:-
படகுகளை விடுவிக்கவேண்டும்
இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர் கள் 51 பேர் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இதேபோன்று, 2 நாட்களுக்கு முன் பிடித்துச்செல்லப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக உள்ள படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்கவேண்டும். படகுகளை விடுவித்தால் தான் மீனவர்கள் தொழில் செய்ய முடியும். இதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோரிக்கை
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள், தங்களின் படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து, விடுதலையான ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர் ராமர் கூறும்போது, தங்களுடைய படகுகளை ஒப்படைக்குமாறு இலங்கை அதிபருக்கு கோரிக்கை விடுத்து இருப்பதாக தெரிவித்தார். ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க ஏற்பாடு செய்வதோடு தனுஷ்கோடி பகுதியில் இருந்து தென்கடல் பகுதிக்கு செல்ல கால்வாய் அமைத்து கொடுத்தால் இலங்கை எல்லைக்குள் செல்வதை முற்றிலும் தவிர்ப்போம் என்றும் அவர் கூறினார்.
நன்றி் : தினத்தந்தி