தலைவர் தேர்தல் ரத்து: இந்திய கால்பந்து சம்மேளனம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். தேசிய விளையாட்டு கொள்கைக்கு மாறாக பிரபுல் பட்டேல் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வக்கீல் ராகுல் மெக்ரா டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவிந்திர பாத், நஜ்மி வாஜிரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ‘தேசிய விளையாட்டு கொள்கையை பின்பற்றாமல் நடத்தப்பட்ட அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் தேர்தல் (பிரபுல் பட்டேல் தேர்வு) செல்லாது என்றும் புதிய தேர்தலை 5 மாத காலத்துக்குள் நடத்த வேண்டும் என்றும் கடந்த 31-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இடைக்கால நிர்வாகி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியை நியமித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை (தலைவர் தேர்தல் ரத்து) எதிர்த்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அப்பீல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அப்பீல் மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.