ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: 5-வது முறையாக தங்கம் வென்றார் மேரிகோம்
8-வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்தது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதிப்போட்டியில் இந்தியாவின் மேரிகோம், வடகொரியாவின் கிம் ஹியாங் மியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேரிகோம் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தார். கிம் ஹியாங் மி பதில் தாக்குதலில் ஈடுபட்டாலும் அதனை மேரிகோம் லாவகமாக தடுத்ததுடன், தொடர்ச்சியாக குத்துகளை விட்டு எதிராளியை நிலைகுலைய செய்தார்.
முடிவில் மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் கிம் ஹியாங் மியை எளிதில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆசிய போட்டியில் மேரிகோம் சுவைத்த 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2003, 2005, 2010, 2012-ம் ஆண்டுகளில் தங்கப்பதக்கமும், 2008-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார்.
மணிப்பூரை சேர்ந்த 35 வயதான மேரிகோம் உலக போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா லாதர், சீன வீராங்கனை யின் ஜூன்ஹிவாவை எதிர்கொண்டார். இருவரும் வலுவான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். நடுவர்கள் குழுவின் பெரும்பாலானவர்களின் முடிவின் படி சீன வீராங்கனை யின் ஜூன்ஹிவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சோனியா லாதர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான அரியானாவை சேர்ந்த 25 வயதான சோனியா லாதர் 2012-ம் ஆண்டு ஆசிய போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார்.
இந்த தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ‘தங்கமங்கை’ மோரிகோம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வென்ற பதக்கங்களில் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சொந்த போராட்டங்களுக்கு மத்தியில் இந்த பதக்கத்தை நான் கைப்பற்றி இருக்கிறேன். நான் எம்.பி.ஆன பிறகு வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இது எனது புகழை மேலும் உயர்த்தும் என்று நம்புகிறேன். இந்த பதக்கத்தை என்னை ஆதரித்தவர்களுக்கு மட்டுமல்லாது, ‘இனி அவ்வளவு தான்’ என்று என்னை விமர்சித்தவர்களுக்கும் சேர்த்து சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
நான் தற்போது எம்.பி.யாக இருந்து வருகிறேன். வழக்கம் போல் மேல்-சபை கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். அதேநேரத்தில் இந்த போட்டிக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். அரசு பார்வையாளராகவும் நான் இருக்கிறேன். விளையாட்டு தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறேன். இத்தனை செயல்பாடுகளுக்கு மத்தியில் நான் வெற்றி பெற்றது எவ்வளவு கடினம் என்பதை மக்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்.
எனக்கென்று பல கடமைகள் இருக்கிறது. குறிப்பாக தாயாக எனது 3 குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. எல்லா பணிகளையும் எப்படி ஒருசேர சமாளிக்க முடிகிறது என்பது இன்னும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இந்த போட்டியை அடுத்து நான் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறேன். தற்போது பயணம் செய்வது எனக்கு பிடிப்பதில்லை. பயணத்தில் ஏற்படும் அலைச்சல் என்னை பாதிக்க தான் செய்கிறது. இருப்பினும் நமது பொறுப்பையும், அர்ப்பணிப்பையும் விட்டு வெளியேறி விட முடியாது.
தற்போது போட்டி தரம் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் அதற்கு தகுந்தபடி என்னால் நன்றாக செயல்பட முடிகிறது. ஏனெனில் இந்த எடைப்பிரிவு (48 கிலோ) எனக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்த போட்டியில் நான் சந்தித்த பல வீராங்கனைகளுடன் 51 கிலோ எடைப்பிரிவில் ஏற்கனவே மோதி இருக்கிறேன். அவர்களை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எனது நம்பிக்கையை அதிகரிக்கும். எனது உடல் தகுதியில் எந்தவித பெரிய பிரச்சினையும் இல்லை. நான் மிகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். ஒருபோதும் பெரிய காயப் பிரச்சினைகளை நான் சந்தித்ததில்லை. எனது உடல் தகுதி தான் வெற்றியின் ரகசியமாகும்.
இவ்வாறு மேரிகோம் கூறினார்.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
தங்கப்பதக்கம் வென்ற மேரிகோமுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் உள்பட பலர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘மேரிகோமின் வெற்றி எல்லா இந்தியர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கும். இது இந்திய பெண்களின் பலத்துக்கு எடுத்துக்காட்டாகும். மேரிகோமை நினைத்து பெருமிதம் அடைகிறோம்’ என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய்சிங் பாராட்டி உள்ளார்.