பெங்களூருவில், காவலாளிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி விஞ்ஞானி சர் சி.வி.ராமன் வீட்டில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
பெங்களூருவில், நோபல் பரிசு விஞ்ஞானி சர் சி.வி.ராமன் வீட்டில் காவலாளிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சந்தன மரங்களை வெட்டி கடத்திய முகமூடி அணிந்த 6 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கத்தியை காட்டி மிரட்டல்
இந்தியாவில், இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் விஞ்ஞானி சர் சி.வி.ராமன். இவருக்கு சொந்தமான வீடு பெங்களூரு மல்லேசுவரம் 15–வது கிராசில் உள்ளது. சர் சி.வி.ராமன் மறைவுக்கு பிறகு இந்த வீட்டை கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. வீட்டு வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவருடைய வீட்டில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு சீனிவாஸ் மற்றும் கங்காதர் ஆகியோர் காவல் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென்று அவருடைய வீட்டு வளாகத்திற்குள் 2 கார்களில் 6 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் தங்களின் முகத்தில் முகமூடிகள் அணிந்திருந்தனர். பின்னர், அவர்கள் உடனடியாக காவலாளிகள் 2 பேரையும் சிறைபிடித்து அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். அதாவது, கூச்சலிட்டால் கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டினார்கள்.
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
இதனால், காவலாளிகள் 2 பேரும் கூச்சல் போடவில்லை. இந்த வேளையில், மரம் வெட்டும் எந்திரத்தை எடுத்த மர்மநபர்கள் அங்கு இருந்த 2 சந்தன மரங்களை மின்னல் வேகத்தில் வெட்டினார்கள். பின்னர், அந்த சந்தன மரங்களை அவர்கள் துண்டுகளாக்கி கட்டைகளை 2 கார்களில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கடத்திச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து காவலாளிகள் மல்லேசுவரம் போலீசில் உடனடியாக புகார் செய்தனர். அதன்பேரில், மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, சந்தன மரங்கள் கடத்தியவர்கள் தமிழில் பேசியது தெரியவந்தது. மேலும், சந்தன மரக்கடத்தலில் கைதேர்ந்த கும்பல் தான் இதில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவாக உள்ள 6 மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.