
தூத்துக்குடியில் 6 பைக்குகளை திருடிய பலே திருடன் சிக்கினான் தனிப்படை போலீசார் அதிரடி
கடந்த 16.02.2024 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்ஸமகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனிப்படை போலீசார் விசாரணையில் பைக்கை திருடியது ஓட்டப்பிடாரம் சந்தணமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22) என்பதும், அவர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடி நம்பர் பிளேட்டை கழட்டி வைத்து ஓட்டி திரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தங்ககுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 2,07,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தனிப்படை போலீசார் தங்ககுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் தங்ககுமார் இதுபோன்று ஏற்கனவே 5 இருசக்கர வாகனங்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரிடமிருந்து ரூபாய் 1,93,000/- மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
துரிதமாக செயல்பட்டு கைது செய்து மொத்தம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.