Breaking News
“ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா சொத்து சேர்த்தார்” முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

“வருமானவரி சோதனையால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா சொத்து சேர்த்தார்” என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா மற்றும் குடும்பத்தினரின் வீடுகளில் வருமானவரி சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அகில இந்திய அளவில் போலி நிறுவனங்கள் மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அதை வருமான வரித்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மத்திய, மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை.

சுயமாக தன்னாட்சியுடன், ஆதாரத்துடன் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. சோதனையில் பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளதே அதை உறுதிப்படுத்துகிறது. சசிகலா குடும்பத்தை சேர்ந்த விவேக் என்பவர் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு எப்படி ஆயிரம் கோடி மதிப்பில் பீனிக்ஸ் மால் வந்தது?

சாதாரண நிலையில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, அவரையே ஏமாற்றி நல்லவர்போல் நடித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துகளை சசிகலா குடும்பம் சேர்த்துள்ளது.

நான் ஒன்றும் காந்தியின் பேரன் இல்லை என தினகரன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி தேசபிதா. அவர் நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக சிறை சென்றவர். அவரை ஒப்பிட்டு தினகரன் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

கே.பி.முனுசாமி எங்கள் அணிக்கு வர தயாராக இருந்ததாகவும், தற்போது குற்ற உணர்வோடு இருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். 1998-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கட்சியிலும், ஆட்சியிலும் எனக்கு கிடைக்கவேண்டிய பல்வேறு பொறுப்பு மற்றும் பதவிகள் வராமல் தடுத்தவர் சசிகலா. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எங்கு நான் வெற்றி பெற்றுவிடுவேனோ என, பின்னர் பென்னாகரம் தொகுதிக்கு மாற்றியவர் சசிகலாதான். கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளவர்களையும், நல்ல நிர்வாகிகளையும் செயல்படாமல் செய்தவர் சசிகலா.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த தேர்தலின்போது சீட்டு கொடுக்கக்கூடாது என சசிகலா தடுத்தார். ஆனால் அதையும் மீறிதான் ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்திற்கு சீட்டு கொடுத்தார்.

1996-ல் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. தற்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெறும் சோதனை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.