Breaking News
கூடங்குளம் 5 மற்றும் 6–வது அணு உலைகளில், 50 சதவீதம் இந்தியாவில் தயாராகும் பாகங்கள் ரஷிய துணை தூதர் தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6–வது அணு உலைகளின் 50 சதவீதத்துக்கும் மேலான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என ரஷிய துணை தூதர் கூறினார்.

6 அணு உலைகள்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ரஷியாவின் ரோசடோம் நிறுவன ஒத்துழைப்புடன் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட 6 உலைகள் நிறுவ தீர்மானிக்கப்பட்டது.

இதில் 2 உலைகளின் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்திருக்கும் நிலையில், 3–வது மற்றும் 4–வது உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இது ரூ.39,747 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

ரூ.50 ஆயிரம் கோடி செலவு

இந்த பணிகள் முடிவடைந்தவுடன் 5 மற்றும் 6–வது உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும். சுமார் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நிறுவப்பட உள்ள இந்த உலைகளுக்கான ஒப்பந்தம் இந்தியா–ரஷியா இடையே சமீபத்தில் கையெழுத்தானது. இதில் பாதி தொகையை ரஷியா கடனாக வழங்குகிறது.

இந்த உலைகளில் அதிகமான அளவு உள்ளூரில் (இந்தியாவில்) தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்படும் என ரஷியா கூறியுள்ளது. இது தொடர்பாக ரஷிய துணைத்தூதர் ஆன்ட்ரேய் சில்ட்சோவ் நேற்று மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உள்நாட்டில் தயாரானவை

கூடங்குளத்தில் 2 அணு உலைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மேலும் 2 உலைகளின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த யூனிட்டுகளில் பயன்படுத்தப்படும் சுமார் 20 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே (இந்தியா) தயாரிக்கப்பட்டவை. மேலும் இயங்கி வரும் யூனிட்டுகளிலும் சுமார் 20 சதவீத பாகங்கள் இந்தியாவில் தயாரானவை.

ஆனால் இந்த உள்நாட்டு தயாரிப்பு பங்களிப்பை 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி 5 மற்றும் 6–வது உலைகளில் 50 சதவீதத்துக்கும் மேலான பாகங்கள் இந்தியாவில் தயாரானவையாக இருக்கும் என நம்புகிறோம்.

அணுசக்திக்கு மாற்று இல்லை

ரஷியாவின் உதவியுடன் புதிதாக 6 அணு உலைகள் அமைப்பதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினால், நாங்கள் கட்டுமானப்பணிக்கான செலவினத்தை குறைக்க எங்களுக்கு வழி ஏற்படும். அதைப்போல மலிவான விலையில் தொடர்ந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்.

இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாட்டுக்கு அணுசக்திக்கு மாற்று எதுவும் இல்லை. அந்தவகையில் இந்தியாவின் வளர்ச்சி சரித்திரத்தில், ரஷியாவும் பங்கெடுக்கும்.

இவ்வாறு ஆன்ட்ரேய் சில்ட்சோவ் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.