அந்திராவில் ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா வனச்சரக அதிகாரிகள் கடப்பா–சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள பாலுகொண்டலு வனப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் மாவட்டம் பாக்ராப்பேட்டை அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக்கொண்டு வந்தவர்கள், வனத்துறையினரை பார்த்ததும் செம்மரங்களை ஆங்காங்கே கீழே போட்டு விட்டு வனப்பகுதியில் தப்பி ஓடினர்.
அவர்களை வனத்துறையினர் விரட்டிச்சென்று 6 பேரை பிடித்தனர். பிடிபட்டவர்கள் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மாதவன், சக்திவேல், குப்புசாமி, அருண்மணி, கோவிந்தன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 80 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.