‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை மிகப்பெரிய பொய் என்கிறார் யோகி ஆதித்யநாத்
மதச்சார்பின்மை என்ற வார்த்தை மிகப்பெரிய பொய் எனவும், இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “ சுதந்திரத்திற்கு பிறகு மதச்சார்பின்மை என்ற வார்த்தை மிகப்பெரிய பொய்யாகி விட்டது என நம்புகிறேன். இந்த வார்த்தையை உருவாக்கியவர்களும், பயன்படுத்தியவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த அமைப்பும் மதச்சார்பின்மையாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகள் பிரிவினையை நோக்கி நடுநிலை வகிக்கின்றன. ஆனால், மதச்சார்பின்மையாக இல்லை” என கூறினார்.
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் இந்தியா ஒரு இறையான்மை கொண்ட, பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதித்யநாத்தின் மதச்சார்பின்மை குறித்தான கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.