தாவூத் இப்ராகிம் மும்பை சொத்துகள் இன்று ஏலம் விடப்பட்டது
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் கள்ளக்கடத்தல் வழக்குகளில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள மூன்று சொத்துகளை ஏலம்விட நிதி அமைச்சக அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதையடுத்து, மும்பையில் உள்ள டெல்லி சைக்கா எனப்படும் ரவுனக் அப்ரோஸ் உணவு விடுதி, ஷப்னம் ஓய்வு விடுதி மற்றும் டமார்வாலா கட்டிடத்தில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ஆறு அறைகள் இன்று ஏலம் விடப்பட்டது.
ரவுனக் அப்ரோஸ் உணவு விடுதி 4.53 கோடி ரூபாய்க்கும், ஷப்னம் ஓய்வு விடுதி ரூ.3.52 கோடி ரூபாய்க்கும், டமார்வாலா கட்டிடத்தில் உள்ள ஆறு அறைகள் 3.53 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனது. சைபி புர்ஹானி அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த மூன்று சொத்துகளையும் ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.