டோனியை விமர்சிப்பவர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை பார்க்க வேண்டும்’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி
3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா வந்துள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி விலக வேண்டிய தருணம் வந்து விட்டது என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், அகர்கர் ஆகியோர் விமர்சித்து இருந்ததற்கு, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விக்கெட் கீப்பிங்கில் டோனியை விட சிறந்த திறமை கொண்டவர்கள் யாரும் இல்லை. பேட்டிங்கில் அவரது சமயோதய புத்திகூர்மை அபாரமானதாகும். அவரை பற்றி விமர்சனம் செய்பவர்கள் அதற்கு முன்பு தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை பார்க்க வேண்டும். தற்போதைய இந்திய அணி பீல்டிங்கில் உலகின் சிறந்த அணியாக விளங்குகிறது. முந்தைய இந்திய அணிகளை விட தற்போதைய அணி வித்தியாசமானது.
இந்திய அணி வெற்றி முகத்தை நோக்கியே இருக்கிறது. தென்ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த போட்டி தொடரை வெல்வோம் என்று நம்புகிறோம். ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதை பற்றி கேட்கிறீர்கள். இந்த அணி ஒரு குறிப்பிட்ட நபரை நம்பியில்லை. நாங்கள் இணைந்தே தோற்கிறோம். இணைந்தே வெற்றி பெறுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியின் துணைகேப்டன் ரஹானே கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்த இலங்கை தொடருடன் ஒப்பிடுகையில் இந்த போட்டி தொடர் முற்றிலும் வித்தியாசமானது. இலங்கை அணியை எளிதாக எடுத்து கொள்ளமாட்டோம். டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். எல்லா தொடரும் மிகவும் முக்கியமானது. எல்லா போட்டி தொடரிலும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இங்குள்ள சூழ்நிலை எங்களுக்கு நன்கு தெரியும். தென்ஆப்பிரிக்க தொடர் வித்தியாசமானது. தென்ஆப்பிரிக்கா செல்லும் போது தான் அந்த தொடர் குறித்து சிந்திப்போம். தற்போது எங்கள் கவனம் எல்லாம் இலங்கைக்கு எதிரான தொடர் மீது தான் உள்ளது.
இலங்கை அணியை நாங்கள் மதிக்கிறோம். எங்களது ஆட்ட திறனை வெளிப்படுத்த விரும்புகிறோம். எதிரணியின் வியூகம் குறித்து சிந்திப்பதை தவிர்த்து, எங்களது பலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறோம். பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.