Breaking News
கோவையில் உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். பின்னர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதன் பிறகு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். பிறகு திடீரென்று கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கியமான உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள குமணன் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பிற்பகல் 3 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்களுடன் 3.15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6.15 மணி வரை 3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.

அத்துடன் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் செய்யப்பட்டு வருகின்றன? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதுபோன்று டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவர்னருக்கு தெரிவித்தனர்.

இதன் பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் நமது மாவட்டத்துக்கு வந்து இருக்கிறார். கோவை விமான நிலையத்தில் நான் அவருக்கு வரவேற்பு அளித்தேன். பின்னர் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். கவர்னர் நமது மாவட்டத்துக்கு வந்தது நமக்கு பெருமைதான். இங்குள்ள அதிகாரிகளை சந்தித்து அவர் பேசியதில் எவ்வித தவறும் இல்லை. அது ஆரோக்கியமான விஷயம்தான்.

நமக்கு நல்ல கவர்னர் கிடைத்து உள்ளார். அவர் மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதால், மத்திய அரசின் திட்டங்கள் அதிகமாகத்தான் வரும். இதுபோன்று கவர்னர் ஆலோசனை நடத்துவது தவறு இல்லை. அது மாநில சுயாட்சி உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.