ஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கு விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு
2018 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாகவும் குறுகிய நாட்களில் பல முறை செல்லக்கூடிய விசா வழங்க உள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசின் விசா எளிமைப்படுத்துதல், அடிக்கடி ஜப்பான் செல்லும் இந்தியர்கள் மற்றும், தொழிலபதிர்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு பயனளிக்கும் என்று இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ கடந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக இரண்டுமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம்.இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள் வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட விசா விதிமுறைகளின் படி, விசா விண்ணப்ப ஆவணங்களில், பலமுறை பயணிக்கும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, வேலைவாய்ப்பு சான்றிதழ் மற்றும் விளக்க கடிதம் ஆகிய இரண்டுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை நுழைவு விசாவுக்கு விண்ணப்பிக்கையில், பாஸ்போர்ட் விசா படிவம், நிதி திறன்(சுற்றுலா செல்பவர்களுக்கு), நிறுவனங்களுடன் தொடர்புடையதற்கான உறுதி ஆவணங்கள்( வணிக நோக்கில் செல்பவர்களுக்கு)ஆகியவற்றை வழங்கினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில், ஜப்பானுக்கு ஒருமுறை பயணிக்கும் இந்திய மாணவர்களுக்கு, விசா விண்ணப்ப விதிமுறைகளை எளிமைப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.