150 படங்கள் திரையிடப்படுகின்றன சென்னையில், சர்வதேச திரைப்பட விழா டைரக்டர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்
சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 150 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவை டைரக்டர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.
சர்வதேச திரைப்பட விழா
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா தமிழக அரசு ஆதரவுடன் வருகிற 12–ந்தேதி வரை நடக்கிறது. இதில் 50 நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
ஐநாக்ஸ், கேசினோ, ரஷியா கலாசார மையம், பெலாஷோ தியேட்டர், ஆர்.கே.வி. திரைப்பட பள்ளி திரையரங்கம் ஆகிய 5 தியேட்டர்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்களும் திரையிடப்படுகின்றன. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரியகாந்தி’ ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.
பாரதிராஜா
சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடந்தது. டைரக்டர் பாரதிராஜா இதில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது:–
தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களால் கவரப்பட்டேன். சினிமாவை சொர்க்க பூமியாக கருதி ஒரு மாய மானை போல, இந்த துறைக்கு ஓடிவந்தேன். இங்கு வந்த பிறகு தான் சினிமா என்பது சொர்க்க பூமி அல்ல, ஒரு சமூக ஊடகம் என்பது புரிந்தது.
உலகிலேயே வலிமையான ஊடகம் சினிமா தான். சினிமாவின் கலாசார பரிவர்த்தனைகள் மூலம் உலகமே சுருங்கிவிட்டது. 14 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருவது பெரிய விஷயம்.
பாக்யராஜுக்கு கவுரவம்
தமிழ் திரைப்பட துறையில் இருப்பவர்கள் தொழில்நுட்பத்தில் உலக அளவில் போட்டிபோடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வெளிநாட்டு படங்களை பார்த்து தொழில்நுட்ப அறிவை அவர்கள் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதேநேரம் நமது கலாசாரம், பண்பாட்டை வெளிநாட்டவர்களுக்கு சொல்லவேண்டும். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
விழாவில், டைரக்டர் பாக்யராஜுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, நடிகைகள் சுஹாசினி, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் அருள்பதி, கல்யாண், காட்றகட்ட பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தோசினி அப்ரிசியேஷன்ஸ் அமைப்பின் தலைவர் கண்ணன் வரவேற்றார். தங்கராஜ் நன்றி கூறினார்.
நன்றி் : தினத்தந்தி