சந்தோஷம் இல்லாத திருமண வாழ்க்கையில் நீடிப்பது தவறு” நடிகை அமலாபால் பேட்டி
“சந்தோஷம் தராத திருமண வாழ்க்கையில் நீடிப்பது தவறு. அதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும்” என்று நடிகை அமலாபால் கூறினார்.
பேட்டி
இதுகுறித்து நடிகை அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் 7 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வருடமே அவை அனைத்தும் திரைக்கு வந்து விடும். திருமண வாழ்க்கை எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. அதனால் விவாகரத்துக்கு சென்றேன். விரைவில் விவாகரத்து கிடைத்து விடும். திருமணம் என்பது சிறுவயதில் நான் எடுத்த முடிவு. இப்போது பிரிவு ஏற்பட்டது கூட நல்லதுக்கு என்றே நினைத்துக் கொள்கிறேன்.
திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காதபோது, அதில் இருந்து விலகுவதற்கு தயங்க கூடாது. மகிழ்ச்சி இல்லாத அந்த சடங்குக்குள் வறட்டு கவுரவத்துக்காக நீடித்து இருப்பது தவறு. வெளியேறி விட வேண்டும். என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் எனக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எனது குடும்பத்தினர் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்து அந்த வேதனையில் இருந்து என்னை மீட்டு விட்டார்கள்.
பாதிப்பு இல்லை
விவாகரத்து நிகழ்வுகள் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் முன்பு போலவே என்னை வரவேற்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு கூட, நான் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகும் தொடர்ந்து நடித்தேன். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.
வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். சுதிப் ஜோடியாக கன்னட படமொன்றில் நடித்து கன்னட திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கிறேன். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.
லட்சியம்
என்னை அணுகும் டைரக்டர்களிடம் படத்தின் கதை மற்றும் எனது கதாபாத்திரம் பற்றி மட்டுமே கேட்கிறேன். கதாநாயகன் யார் என்று கேட்பது இல்லை. திருமணம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் எனக்கு சந்தோஷத்தையே அளித்துள்ளன. நான் நடித்த படத்தை பல வருடங்கள் கழித்து திரும்பி பார்க்கும் போதும் இப்படி ஒரு நல்ல படத்தில் நடித்து இருக்கிறேனே என்ற சந்தோஷத்தை தரவேண்டும்.
அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். நான் மாடர்னாக உடை அணிவதை சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த நபர்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.”
இவ்வாறு அமலாபால் கூறினார்.
நன்றி் : தினத்தந்தி