நளினிக்கு பரோல் தரக் கூடாது… வெளிநாடு தப்பி செல்வாராம்- ஹைகோர்ட்டில் தமிழக அரசு
நளினிக்கு பரோல் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், அவரின் மனைவி நளினி உள்ளிட்டோர் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். நளினி தன்னுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து அவருக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.இதனையடுத்து 26 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகள் லண்டனில் படிப்பதாகவும் அவருக்கான திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உள்துறை, சிறைத்துறை சார்பாக கூட்டாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நளினி செய்தது அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றம். அவருக்கு பரோல் அளித்தால் அவர் தப்பி சென்றுவிடக் கூடும் என்பதால் அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைய விசாரணையின் போது இரு தரப்பு வாதத்தையும் கேட்டு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.