வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசி மகன் விவேக்கிடம் இன்று மீண்டும் விசாரணை
சென்னையில் ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரியும், இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் கடந்த 9–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டார்கள். இந்த சோதனையில் கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் அதிகாரிகள் கையில் சிக்கின.
இதையடுத்து விசாரணை முடிந்த கையோடு விவேக்கை 13–ந்தேதி அன்று மாலை 5.50 மணி முதல் இரவு 10.15 மணி வரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி நேற்று அவரை விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஆனால் அவரிடம் விசாரணை நடத்துவதாக இருந்த அதிகாரி சொந்த பணி காரணமாக வெளியே சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் விவேக்கை இன்று காலை 10 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேசுக்கு சொந்தமான சென்னை நீலாங்கரை மற்றும் தஞ்சையில் உள்ள வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவருடைய நீலாங்கரை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நேற்று அவரிடம் விசாரணை நடந்தது. இதற்காக அவர் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் காலை 10.45 மணிக்கு ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அவர் மதியம் 1.30 மணியளவில் வெளியே வந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் பேட்டி அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.