ஜிம்பாப்வேயில் அதிபர் பதவியில் இருந்து விலக முகாபே மறுப்பு
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் அதிபர் பதவி வகித்து வருபவர், ராபர்ட் முகாபே (வயது 93). இவருடைய மனைவி கிரேஸ் முகாபேவுக்கும், முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனன்காக்வாவுக்கும் யார் அடுத்த அதிபராக வருவது என்பதில் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இதனால் ஆளுங்கட்சியில் பிளவு உருவானது.
அதைப் பயன்படுத்தி ராணுவம் களத்தில் குதித்து, அதிபரிடம் இருந்து கடந்த 15–ந் தேதி அதிரடியாக அதிகாரத்தை பறித்தது. அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ராபர்ட் முகாபேயை பிராந்திய தூதர்கள் உடனிருக்க ராணுவ தளபதிகள் நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக ராணுவ தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் முகாபே பதவி விலக மறுத்து வருகிறார். அவர் இன்னும் அவகாசம் கேட்க முயற்சிக்கிறார் போலும்’’ என குறிப்பிட்டன.
ராபர்ட் முகாபேயை சுமுகமான முறையில் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வாவை அதிபர் ஆக்கும் திட்டத்தில் ராணுவம் செயல்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.