அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிரிக்கெட் சங்கம் வழக்கு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் பழனி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு 1935-ம் ஆண்டு (சுமார் 15 ஏக்கர் நிலம்) 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதனால், 1965 மற்றும் 1995-ம் ஆண்டுகளில் குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த இடத்துக்கான குத்தகையை புதுப்பிக்கக் கோரி கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
அப்போது, ரூ.32 லட்சம் குத்தகை பாக்கி இருப்பதாக தெரிவித்ததையடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் அத்தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்திவிட்டது. ஆனால் செப்டம்பர் மாதம் ரூ.1,553 கோடி குத்தகை பாக்கி இருப்பதாக திருவல்லிக்கேணி-மயிலாப்பூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசின் அடிப்படையில் வருகிற 20-ந்தேதி வரை நடவடிக்கை எடுக்கமாட்டோம்’ என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.