இந்திய கப்பல் படையில் முதல் பெண் பைலட் தேர்வு போர்தளவாடங்கள் பிரிவு அலுவலகத்துக்கும் 3 பெண்கள் தேர்வானார்கள்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கப்பல்படை கமாண்டரின் மகள் சுபாங்கி சொரூப். இவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘எழிமலா நேவல் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தில் கப்பல்படை தொடர்பான பயிற்சியை பெற்றார்.
இவர் இந்திய கப்பல்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல அந்த பயிற்சி மையத்தில் படித்த டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் கப்பல்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கனவு நனவானது
இவர்கள் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கப்பல்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்திய கப்பல் படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள். இவர்களில் சுபாங்கி சொரூப் விரைவில் கப்பல்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் கூறும்போது, ‘‘பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது’’ என்றார்.
கப்பல்படையின் செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:–
சுபாங்கி கப்பல்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கப்பல்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
என்.ஏ.ஐ. கிளை கப்பல்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்ள 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள். சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுகளும் பயிற்சி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.