இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலி: ஆய்வில் அதிர்ச்சி
இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனையாகும் மருத்துகளில் 10ல் ஒன்று போலி என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
போலி மருந்துகள்:
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) உலகின் பல்வேறு நாடுகளில் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவித்ததாவது: இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10.5 சதவீத மருந்துகள் போலியானவை. போலி மருந்துகள் நோயை குணப்படுத்த தவறுவதால், மலேரியா, நிமோனியா போன்ற நோய்களால் பலியாகும் குழந்தைகளின் இறப்புக்கும் இம்மருந்துகளே காரணம். வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் தரமான மருந்துகளும் நோயை முற்றிலும் குணப்படுத்துவது கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரியாவில் இந்தியா முதலிடம்:
இந்நிலையில், தெற்காசிய நாடுகளில் இந்தியாவில் தான் மலேரியா பாதிப்பு அதிகம் எனவும், கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் மலேரியா காய்ச்சலுக்கு 331 பேர் பலியானதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மலேரியாவை முறையாக கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் இந்தியா பின்தங்கி இருப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.