பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் பயணம்: தென் மாவட்ட ரெயில்களில் காத்திருப்பு பட்டியல் நீள்கிறது ‘சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?’ என பயணிகள் எதிர்பார்ப்பு
இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் ரெயில்களில் காத்திருப்பு பட்டியல் நீள்கிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? எனும் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.
பண்டிகை காலங்களில்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிழைப்புக்காகவும், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் சென்னையை தேடி வந்தவர்கள் ஏராளம். ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பிரியப்படுவர். பாதுகாப்பு மற்றும் கட்டணம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் தேர்வு செய்வது ரெயில் பயணங்களையே.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பஸ்–ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். பயணிகள் தேவைக்காக சிறப்பு பஸ்கள் மாநில அரசாலும், சிறப்பு ரெயில்கள் ரெயில்வே நிர்வாகத்தாலும் இயக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலத்தின்போது மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்–ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கூட்ட நெரிசலுடன் பயணம் செய்வது ஓரளவு தவிர்க்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை
இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14–ந்தேதி (சனிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. வார விடுமுறை தினத்தில் வருவதால் பெரும்பாலானோர் 12 அல்லது 13–ந்தேதிகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புவார்கள். குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மிகவும் பிரயாசைப்படுவார்கள்.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஏறக்குறைய அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் பாண்டியன், வைகை, நெல்லை, அனந்தபுரி, முத்துநகர், கன்னியாகுமரி, செந்தூர், பொதிகை, குருவாயூர், ராமேசுவரம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. ஒவ்வொரு ரெயில்களிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது.
காத்திருப்பு பட்டியல்
அந்தவகையில் மதுரை நோக்கி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12637) வருகிற 12–ந்தேதி 399–ம், 13–ந்தேதி 341–ம் என காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12–ந்தேதி 282–ம், 13–ந்தேதி 261–ம் என்ற நிலையில் காத்திருப்பு பட்டியல் உள்ளது. அதேபோல, பிற தென் மாவட்ட ரெயில்களில் வருகிற 12 மற்றும் 13–ந்தேதிகளுக்கான காத்திருப்பு பட்டியல் விவரம் வருமாறு:– (அடைப்புக்குள் 12–ந்தேதி/13–ந்தேதி)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (331/218), அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (279/185), முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (281/193), கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (262/214), செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (191/143) பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (336/282), குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (181/161), ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (165/179).
பயணிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கூட்ட நெரிசலில் சிக்காமல் முன்பதிவு செய்ய நினைத்து காத்திருக்கும் பயணிகளுக்கு இது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கமான நாட்களை காட்டிலும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் நிறைந்த ரெயில் நிலையங்கள் காணப்படும் என்பதாலும், ரெயிலில் சிக்கி திணறி செல்லும் நிலை ஏற்படக்கூடாது என்பதாலும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படுமா? எனும் எதிர்பார்ப்பில் பயணிகள் இருக்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது–
சிறப்பு ரெயில்கள்
ஒவ்வொரு ஆண்டும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசல் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதுபோல ரெயில் சேவையும் அமையவேண்டும். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படாதது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பொங்கல் பண்டிகையை கருத்தில்கொண்டு சிறப்பு ரெயில்களை, அதுவும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் ரெயில்வே நிர்வாகம் நல்ல தீர்வை அளிப்பார்கள் என்று நம்புகிறோம். பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்
நன்றி : தினத்தந்தி