Breaking News
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் திரண்ட இளைஞர் பட்டாளம் காளைகளுடன் வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மெரினாவில் இளைஞர் பட்டாளத்தினர் திரண்டு போராட்டம் நடத்தினர். பலர் தங்கள் காளைகளுடன் வந்தும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ‘பேஸ்–புக்’, ‘வாட்ஸ்–அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக இந்த போராட்டத்துக்கான அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய, கலாசார மற்றும் வீர விளையாட்டாகவும் கருதப்படுவது ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இதுதவிர மதுரையில் பாலமேடு, அவனியாபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கும் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் நடக்கவில்லை.

சமூக வலைதளங்களில் அழைப்பு
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்தாண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீர வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கை விடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு மீதான தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் சேவ் ஜல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டை பாதுகாப்போம்) என்ற பெயரில் ‘கேர் அண்ட் வெல்பெர்’ எனும் அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டனர். இதற்கு அமைப்பினர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் ஆதரவை பெற விரும்பினர். இதையடுத்து பேஸ்–புக், வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ‘ஜல்லிக்கட்டை காக்க வேண்டுமா? உரிமை குரல் கொடுக்க மெரினாவில் தமிழர்கள் அணி திரளுங்கள்’ என்று உணர்ச்சி மிகு வாக்கியங்கள் வைரலாக பரவின. இது இளைஞர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன.

கூட்டம் அலைமோதியது
திட்டமிட்டபடி நேற்று அதிகாலை முதலே மெரினாவில் கலங்கரை விளக்கம் அருகே இளைஞர்கள் திரண்டனர். நேரம் செல்ல செல்ல இளைஞர் கூட்டத்தினருடன், பொதுமக்களும் ஒன்று சேர்ந்தனர். நடை பயிற்சி செல்ல வந்தவர்களும், கடற்கரை அருகில் உள்ள மக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

‘ஜல்லிக்கட்டை பாதுகாப்போம்’, ‘தமிழர் மானத்தை காப்போம்’, ‘தமிழர் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து காட்டுவோம்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கலங்கரை விளக்கத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. செல்கிற வழியெங்கும் பார்க்கும் மக்களிடம் பேரணியில் பங்கேற்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்களும் உற்சாகமாக பேரணியில் சிறிது நேரம் பங்கேற்று சென்றனர்.

உணர்வு ரீதியாக…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் அரங்கேறிய இந்த மாபெரும் பேரணி அனைவரது கவனத்தை ஈர்க்க இன்னொரு காரணமும் முக்கியமாக அமைந்தது. பேரணியில் பங்கேற்க வந்த பல இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் காளைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். மெரினாவில் காளைகளுடன் கோ‌ஷம் எழுப்பியபடி பேரணி நடந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

கலங்கரை விளக்கத்தில் தொடங்கிய இந்த பேரணி உழைப்பாளர் சிலை அருகே நிறைவடைந்தது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கடற்கரை சர்வீஸ் சாலையிலேயே இந்த பேரணி நடந்தது. பேரணி முடிந்ததும் பங்கேற்ற அனைவரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் உணர்வு ரீதியாக குரல் கொடுத்த இளைஞர்களுக்கு அமைப்பின் நிறுவனர் சிந்துராம் நன்றி தெரிவித்தார்.

தென்னிந்திய மாணவர் இயக்கம்
இதேபோல, தென்னிந்திய மாணவர் இயக்கம் சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலங்கரை விளக்கத்தில் தொடங்கி உழைப்பாளர் சிலை வரை நடந்த இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

‘ஜல்லிக்கட்டு நமது வீர விளையாட்டு. நம் பண்பாட்டை மீட்டெடுக்க நாம் உறுதியாக இருப்போம்’, என்று கோ‌ஷம் எழுப்பியபடியே ஊர்வலம் நடந்தது. இதுகுறித்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதுவரையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த விவகாரத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக குரல் கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.