கடற்படையில் இணைந்தது ‘கல்வாரி’ நீர்மூழ்கி கப்பல்
பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, ‘கல்வாரி’ நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது. மும்பையில் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
நம் கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பலான, கல்வாரி, 1967ல் இணைக்கப்பட்டது. 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த அது, 1996ல், படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடற்படைக்கு, ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, பிரான்ஸ் நாட்டின், ‘டி.சி.என்.எஸ்.,’ நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், மும்பையைச் சேர்ந்த மசாகான் கப்பல் கட்டும் நிறுவனம், புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. முதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்கள் முடிந்து, மூன்று மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
மிகவும் வெற்றிகரமாக முடிந்த இந்த சோதனைகளுக்குப் பின், ‘கல்வாரி’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. மும்பையில், இன்று நடக்கும் விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை அர்ப்பணித்து வைத்தார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடற்படை தளபதி, சுனில் லம்பா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பலம் அதிகரிப்பு
மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள இந்த நீர்மூழ்கி கப்பலை, ரேடாரால் கண்காணிக்க முடியாது. அதிக சப்தம் எழுப்பாமல் பயணிக்கும் திறன் உள்ளது. மேலும், ஆழ்கடலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் இணைவதால், கடற்படையின் பலம் அதிகரிக்கிறது.
பாராட்டு:
விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டத்திற்கு இந்த கப்பல் மிகச்சிறந்த உதாரணம். நீர்மூழ்க கப்பல்கள் தயாரிப்பில் இந்தியாவிற்கு உள்ள திறன் 25 ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் கவ்வாரி கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கப்பல் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.